விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினர். இதன் மூலம் தொழில்முனைவோராக இருவரும் களம் இறங்கினர். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். இது நல்ல விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதன் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நயன்தாரா, “இது ரொம்ப சுயநலமா இல்லையானு சில பேர் கேப்பாங்க. இதில் சுயநலம் இருக்கு. ஆனால் அந்த சுயநலத்திற்கு பின்னாடி இருக்கிற பொதுநலம் தான் அதை நியாப்படுத்துகிறது. நாங்க சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இது எல்லாருக்குமே ஒரு தொழில் தான். எல்லாருக்குமே பணம் வருகிறது, அது சந்தோஷமான விஷயம் தான். ஒவ்வொரு பெண்ணும், அவரவர் வீட்டில் இருக்கும் அப்பாவிடமோ, அண்ணனிடமோ காசு வேண்டும் என கேட்க தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை நீங்களே பண்ணிக்கிறீங்க. அதற்கு ஒரு வாய்ப்பாக கோமதி மேடம் வழங்குகிறார். அவருடன் இணைந்து ஃபெமி 9 நடத்துவது ரொம்ப முக்கியமானது.
மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் போய் சேரவில்லை என நினைக்கிறேன். இதற்கு முன்னாடி எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. ஆனால் இன்றைக்கு ஒரு மேடையில் இவ்ளோ ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் இடத்தில், அனைவரின் முன்னாடி சானிட்டரி நாப்கின் என்று சொல்றோம். அதுவே மிகப்பெரிய மாற்றம். ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரம் நிறைந்த சானிட்டரி நாப்கின் கொடுக்க வேண்டும்” என்றார்.