தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா கடைசியாக 'கனெக்ட்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடித்துள்ள நயன்தாரா இந்தியில் ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், ஒரு தனியார் கல்லூரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், "கல்லூரி வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்த நேரத்தில் நண்பர்களாக யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள், பழகுகிறீர்கள் என்பது முக்கியம்.
நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழகினால் வாழ்க்கை ரொம்ப நல்லாயிருக்கும். அதே போல் கெட்ட நண்பர்களை தேர்வு செய்தால் வாழ்க்கை மாறிவிடும். வாழ்க்கையில் பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். தினமும் ஒரு 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் மட்டுமாவது அவர்களுக்கு ஒதுக்குங்கள். அவர்களிடம் நேரம் செலவழியுங்கள்" என்றார்.