'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படம் இன்று (22.12.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'மாயா' திரைப்படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், ஹனியா நபிஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைத்துறையில் நுழைந்து 20 வருடங்களை நெருங்கவுள்ள நயன்தாரா தனது ஆரம்பக்கட்ட நிகழ்வுகள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில், "என் 18வயதில் சினிமாத்துறைக்குள் வந்தேன். ஆரம்பத்தில் எதுவும் தெரியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், சினிமா குறித்து யாராவது பேசினால் அதில் என் பெயரும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசை கொஞ்சம் நிறைவேறியிருக்கிறது. அதுவே பெரிய விஷயமாகப் பார்க்கிறேன்.
நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் நடந்துவிட்டது. ஆனால் நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு. முதல் 10 வருடம் முடிந்து அடுத்த கட்டத்தைத் தொடரும்போது சில கனவுகள் இருந்தது. ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளியாவதில்லை. பெண்களை ஏன் சமமாக நடத்தப்படுவதில்லை என நிறைய யோசித்திருக்கிறேன். அப்போதெல்லாம், ஒரு ஆடியோ ஃபங்க்ஷனுக்கு போனா கூட ஓரமா நிக்க வச்சுருவாங்க. பெரிதளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டாங்க.
அந்த காரணத்தினால்தான் படங்களின் விழாக்களுக்கே போவதை தவிர்த்தேன். நான் கண்ட கனவுகளை எல்லாம் முடித்துவிட்டு எல்லா விழாக்களிலும் போகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதை நான் பின்பற்றவில்லை. பெண்களுக்குச் சமமான நிலை ஏற்படுத்த வேண்டும்; சமமாக நடத்தப்படவில்லை என்றாலும் ஓரளவுக்குச் சமமான இடம் நமக்கு இருக்கணும் என ஆசைப்பட்டேன். அது இப்போ கொஞ்சம் நிறைவேறி இருக்கிறதாகப் பார்க்கிறேன். பெண்கள் மையப்படுத்தின கதை நிறைய உருவாகிறது. பல தயாரிப்பாளர்கள் பெண்கள் மையப்படுத்தின படத்தை எடுக்க முன் வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது" என்றார்.