கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் வரும் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று(7.6.2022) பத்திரிகையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன்," சினிமா துறையில் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் தொடங்கிய என் பணி அடுத்தடுத்து வெற்றியை தேடி தந்தது. இப்போது எனது சொந்த வாழ்க்கைக்காக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். வரும் 9 ஆம் தேதி என் காதலி நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளேன். நாங்கள் முதலில் திருப்பதியில் தான் திருமணம் செய்யலாம் என்று நினைத்தோம், ஆனால் பயணத்தூரம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக திருமணத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றிவிட்டோம். ஜூன் 9ஆம் தேதி காலையில் இந்து முறைப்படி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என குறுகிய வட்டாரத்தின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறோம். அதன் பிறகு வரும் 11 ஆம் தேதி நானும் நயன்தாராவும் சேர்ந்து வந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாகவும், அதனை கெளதம் மேனன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ளா உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மகாபலிபுரத்தில் முழுவீச்சில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.