மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் வகையில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் வருகிற 16-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. கரோனாவுக்கு பிறகு திரையரங்குகளை வெற்றிகரமாகத் திறக்கப் பங்களித்த ரசிகர்களுக்கு நன்றி கூறும்விதமாக இந்தக் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்தது. மேலும் இந்த முன்னெடுப்பில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றனர் என்றும் அறிவித்தனர்.
இந்நிலையில் தேசிய சினிமா தினம் வருகிற 16-ஆம் தேதியிலிருந்து 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தற்போது புது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு தரப்பின் வேண்டுதலின் படியும் அதிக ரசிகர்கள் பங்குபெறும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனிடையில் சிம்பு ரசிகர்கள், படம் வெளியான இரண்டாவது நாளில் குறைந்த கட்டணத்தில் (ரூ.75) பார்க்க ஆவலாக இருந்த நிலையில் தற்போது அதன் தேதி மாற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.