Skip to main content

“அவரை பார்ப்பதைவிட பேச வைத்து கேட்டால் அழகாக இருக்கும்” - ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகையை புகழ்ந்த நாசர்

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

Nassar

 

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சர்வானாந்த கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக அமலா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்க, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகர் நாசர் பேசுகையில், “4 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் டைம் மெஷின் தரை இறங்கியிருக்கிறது. ஒரு தயாரிப்பாளரே அழைத்து இயக்குநரிடம் கதை கேளுங்கள் என்று சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எஸ். ஆர். பிரபு அவருடைய நிறுவனத்தில் ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்கக்கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார். அவர் ஸ்ரீ கார்த்தியை கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சைன்ஸ் பிக்ஷன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயம்.

 

இந்தியாவில் இது போன்ற படம் அதிகம் வருவதில்லை. ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது குழந்தையாக மாறிவிட்டேன். நிறைய பேசினோம், இந்த விஷயங்கள் புரியாது அந்த விஷயங்கள் புரியாது என்று பல மணி நேரம் சண்டைகூட போட்டேன். இந்தக் கதையை ஜுராசிக் பார்க் படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாக கூறினால்தான் புரியும் என்றேன். ஆனால் இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது. அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நிறைய விஷயங்களை பேசினோம். இந்த குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்ததுபோல உணர்ந்தேன்.

 

ஒரு புத்தகத்தில் அழகான கதை இருக்கிறது என்றால் அதில் உள்ள காகிதங்கள்தான் நான். இது உண்மையாகவே ஒரு தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் கதை. அமலா அழகான ஆன்மா கொண்டவர். அறிமுக காலகட்டத்தில் இருந்தே அவர் எனக்கு பழக்கம். அவர் இந்த துறைக்கு மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு டைம் ட்ராவல் தேவையே இல்லை. அப்போது இருந்தது போலவே இருக்கிறார். அவரை பார்ப்பதைவிட பேச வைத்து கேட்டால் அழகாக இருக்கும். பேச்சில் தெளிவு, பரிவு, பாசம் அனைத்தும் நிறைந்திருக்கும். ஆகையால்தான் நான் தள்ளி நின்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.

 

இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த தருணம் மறுபடியும் கிடைத்தால் நான் தவறு செய்யும்போது அதை செய்யாமல் இருக்க முடியாதா என்று தோன்றும். ஒரு காலத்தில் கோட்பாடு ரீதியாக இது நடக்கக் கூடும். அதை இந்த படத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட 2 மணி நேரம் ஆகும். படத்திற்கு மேக்கப் போடுவது விலை உயர்ந்த விஷயம். இதற்காக பிரபு பெங்களூருவில் இருந்து சிறப்பு நிபுணரை வரவழைத்தார். 

 

ஷர்வானந்துடன் சில படங்களில் பழகியிருக்கிறேன். விடா முயற்சி என்பது பழக்கமான வார்த்தையாக இருந்தாலும், ஷர்வானந்துக்கும் பொருந்தும். ரீத்து வர்மா சிறு வயது முதலே என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் தீனி படத்தில் நடித்தோம். ஒரு சிறிய தீவு, அதிலிருந்து வெளியே போகவே முடியாது. ஒரு நாளில் 2 மணி நேரம்தான் கடல் உள்வாங்கும். அந்த சமயத்தில்தான் சென்று வர முடியும். அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு நடிக்கக் கூடியவர். இப்படத்திற்கும் அவருடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் எல்லாருடைய மனங்களையும் போய் சேரும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்