
இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சிக்காக இளையராஜா லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும் உடன் சென்றார். புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ராஜா, “அப்பாவுடைய இசையில் தமிழ் மக்கள் உருகியிருக்காங்க. நம்மை ஆண்ட ஆங்கிலேயரை அவங்க ஊரில் போய் நான் செஞ்சி காமிக்கேரேண்டான்னு நம்ம ஊரு ஆளு போகுறத பார்க்கும்போது ஒரு தமிழனா ரொம்ப பெருமையா இருக்கு. உலக அளவில் இப்போ தமிழ் இசையையும் இந்திய இசையையும் கவனிக்கிறாங்க.
நானும் அப்பாவுடைய ரசிகன் தான். என்னை வேறுமாதிரி பார்க்காதீங்க. அப்பாவும் அப்படித்தான் என்னை ட்ரீட் பண்ணுவார். மகன் என்ற அன்பு இருக்கும் அதே சமயம் இசையை பொறுத்தவரை அப்படி மரியாதை நிமித்தமாக செய்வார். அப்பாவுக்கு சிம்பொனி பண்ண வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. அதை இப்போது சிறப்பாக பண்ண போகிறார். அவர் பண்ணும் போது தமிழ் மக்களும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதனால் இங்கே வந்தும் அவர் ஒரு முறை செய்து காட்டுவார் என நினைக்கிறேன். எனக்கு இசைதான் உயிர் மூச்சு. நம்ம தமிழ் மொழிதான் உலகத்தின் முதல் மொழி மற்றும் சிறந்த மொழி. அதை மற்றவர்களுக்கு புரியும்படி, அவங்க மொழியில் சொல்ல வேண்டும். அதற்காக தான் இந்த நிகழ்ச்சி” என்றார்.