ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ரஜினியை வைத்து 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இசையமப்பாளர் அனிருத் மற்றும் ரஜினிகாந்திற்கு திரைப்பட இசைக்கலைஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தில் சுமார் 1200க்கும் இசைக் கலைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால், தர்பார் படத்திற்காக அனிருத், இச்சங்கத்திலிருந்து ஐந்து இசைக் கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தந்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டாக முன் வைத்திருக்கிறது திரைப்பட இசைக்கலைஞர் சங்கம்.
இதுதொடர்பாக திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவர் தினா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பேட்ட படத்தின் போதே இசையமைப்பாளர் அனிருத்திடம் சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியிருந்தேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து, அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். அவர் எங்கள் சங்கத்திலும் ஒரு உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரிடம் போன் செய்து தர்பார் போன்ற பிரம்மாண்ட படத்தில் சங்கத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருந்தோம் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். அதேபோல அச்சமயத்தில் சங்கத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் அனிருத்துக்கு கடிதம் மூலம் சங்கத்தில் இல்லாத கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதற்கும் சம்மதம் என்றார்.
மூன்று நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியவந்தது தர்பார் படத்தின் மொத்த பின்னணி வேலையும் நடைபெற்று வந்துவிட்டது என்று. இந்தமுறையும் எங்கள் சங்க கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை. இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படத்திற்கு சங்கத்திலிருந்து நான்கு கலைஞர்களையே பயன்படுத்தியிருக்கிறார். எங்களிடம் முன்பே சம்மதம் தெரிவித்துவிட்டு, படத்தின் முழு வேலையும் முடித்துவிட்டார் என்பதை அறிந்தவுடன் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அனிருத் பண்ணுவது சரியில்லை.
இந்த சங்கத்தில் சுமார் 1200 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதில் பலர் தினசரி வாழ்க்கையே இசைக் கலைஞர்களாக பணிபுரிவதில்தான் இருக்கிறது. ஒரு பெரிய படம் என்றால் அதில் 400 முதல் 500 பேர் வரை பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். என்னதான் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்கள் வெளிநாட்டு இசைக்கலைஞர்களை அதிகம் பயன்படுத்தினாலும், அவர்களுக்கு சமமாக நம் சங்கத்தின் கலைஞர்களையும் பயன்படுத்துவார்கள். ஆனால், அனிருத் இந்தமுறை நம் இசைக்கலைஞர்களை கிட்டத்தட்ட தவிர்த்திருக்கிறார். மேலும் இந்த விஷயம் ரஜினி அவர்களுக்கும் தெரியும். இதனால், ரஜினி மற்றும் அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
இதன்மூலமாக இந்த மாதத்திலிருந்து இதுபோன்று சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்பு தராமல், வெளிநாட்டவர்கள் அல்லது சங்கத்தில் இல்லாதவர்களை பயன்படுத்தும் இசையமைப்பாளர்களை சங்கத்திலிருந்து நீக்க இருக்கிறோம் ” என்றார்.