ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் படம் பார்த்தவர்கள் இந்த படம் ரஜினி பட ஸ்டைலிலேயே இருக்கிறது, முருகதாஸ் பட ஸ்டைலில் இல்லை என்று சொல்கின்றனர்.
அது என்ன முருகதாஸ் ஸ்டைல் என்று கேட்கிறீங்களா? உதாரணத்துக்கு துப்பாக்கி படத்துல இருந்து ஒரு சீன் பார்க்கலாம். ஒரே நேரத்தில் மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்கு கட்டளையை எதிர்பார்த்திருக்கும் 12 ஸ்லீப்பர் செல்களை 12 இராணுவ வீரர்களும் பின் தொடர்ந்து ஷூட் செய்யும் காட்சிதான். படத்தில் இது மிகவும் நீளமான ஒரு காட்சிதான் ஆனாலும் விறுவிறுப்புக்கும், ரியலிஸத்திற்கும் பஞ்சமே இருக்காது. நாயகன், இண்டெலிஜண்டாக சிந்தித்து செயல்படுத்தும் ஒரு ஐடியாவாக இருக்கும் அந்த காட்சி. இதே போன்ற இண்டெலிஜெண்டான காட்சி ரமணா படத்தில் மருத்துவமனை காட்சி இருக்கும். கத்தி படத்தில் ஏரி பைப்பில் வயதான விவசாயிகள் உள்ளே இறங்கி போராடும் காட்சி.
இதுபோல தன்னுடைய படங்களின் திரைக்கதைகளில் சுவாரஸ்யமான ஐடியாக்களை சேர்த்திருப்பார். முருகதாஸின் முதல் படமான தீனாவுக்கு பின்னர் அவர் சாதாரண முயற்சியாக எடுத்தது இல்லை. கண்டிப்பாக ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமை, வித்தியாசம், பிரில்லியன்ஸ் தெரியும். ஆனால், இப்போது அவர் ரஜினியை வைத்து இயக்கியிருக்கும் தர்பார், ரஜினி ஸ்டைல் மசாலா படம் என்பது பலரின் கருத்து.
தர்பாரில் சண்டைக் காட்சிகள் மிகவும் கற்பனையாகவே இருந்தது. துப்பாக்கியுடன் இருக்கும் 100 பேரை ரஜினி கத்தியை வைத்துக்கொண்டு காலி செய்வதுபோன்ற காட்சியெல்லாம் இருக்கிறது. தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும்படி இருந்தாலும் இதுபோன்ற காட்சிகள் நெருடலாக இருக்கிறது.
2002ல் முருகதாஸ் தனது இரண்டாவது படமான ரமணாவை தொடங்கியபோது வந்த போஸ்டரே இது வழக்கமான விஜயகாந்த் படம் இல்லை என்பதை சொல்வது போல இருந்தது. அதேபோல படம் வெளியானதும் மேலும் ஆச்சரியத்தை தந்தது. பொதுவாகவே நூறு ஆட்கள் நின்றாலும் தன்னுடைய லெஃப்ட் லெக்காலேயே உதைத்து துவம்சம் செய்பவராக, கரண்ட்டுக்கே ஷாக் கொடுப்பவராக என சூப்பர் ஹீரோவாகவே நடித்த விஜயகாந்த்தை அமைதியான பேராசிரியராக, காலால் டீல் செய்யாமல் கண்ணாலேயே டீல் செய்பவராகக் காட்டியிருந்தார் முருகதாஸ். க்ளைமேக்ஸில் அவர் பேசும் நீண்ட வசனம் கூட, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்தப் படம் அப்போதைய மாணவர்கள், இளைஞர்களிடம் விஜயகாந்தை கொண்டுசென்று அவரது அரசியல் எண்ட்ரீக்கும் உதவியது. மாஸ் மசாலா ஆக்ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்க்கும் கூட முதல் க்ளாஸ் ஆக்ஷன் படமாக முருகதாஸின் துப்பாக்கி அமைந்தது.
இப்படி நாயகர்களை தன் பாதைக்குத் திருப்பிய முருகதாஸ், தர்பார் படத்தில் ரஜினியை தன் ஸ்டைலில் இயக்குவார் என்று எதிர்பார்த்தவர்களை ஏமாற்றி, முழுக்க முழுக்க ரஜினி ஸ்டைலில் சண்டைக் காட்சிகளில் பறக்கவிட்டிருந்தார். ஆங்காங்கே சில ஐடியாக்கள் இருந்தாலும் முழுவதுமாக ஒரு ரஜினி படமாகவே இருந்தது ‘தர்பார்’. சர்காரும் ஏமாற்றம் அளித்த நிலையில் தர்பார் பார்த்தவர்கள் முருகதாஸிடம் இந்த மாற்றம் ஏனோ என வியக்கிறார்கள்.