எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஞாயிறு அன்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி அவரது மரணம் குறித்து எந்த அறிக்கையும், இரங்கலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனிடையே தோனியின் முன்னாள் மேலாளரும், 'எம்.எஸ் தோனி: அன்டோல்ட் ஸ்டோரி' படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே தெரிவிக்கையில், “இது நடந்திருக்கிறது என்பதையே எங்களால் நம்ப முடியவில்லை. என் துயரத்தை வெளிப்படுத்தும் நிலையில் கூட நான் இல்லை. தோனியும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். வெறும் 34 வயதான சுஷாந்துக்குச் செழிப்பான வாழ்க்கை, தொழில் காத்திருந்தது. எனக்கு அதில் சந்தேகமே இல்லை. எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் வரும்.
'எம்.எஸ்.தோனி' படப்பிடிப்பின் போது நான் சுஷாந்துடன் 18 மாதங்கள் செலவிட்டேன். அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முழுக் கவனத்துடன் இருந்தார். தோனி போல ஆட 9 மாதங்கள் பயிற்சி செய்தார். 15 நாட்கள் தோனியுடன் செலவிட்டார். தனது பணி கச்சிதமாக இருக்க எல்லா முயற்சிகளையும் செய்யும் ஒரு நடிகர் சுஷாந்த்.
பயிற்சியின் போது அவருக்கு அடிபட்டது, அவரது முதுகெலும்பில் சிறிய முறிவும் ஏற்பட்டது. ஆனால் அவர் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து ஒரு வாரத்துக்குள் தேறிவிட்டார். அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து தோனியும் ஆச்சரியப்பட்டார். அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சிறந்த நடிகர் இவர் தான் என்பது தோனி உட்பட அனைவருக்குமே தெரிந்திருந்தது” என்றார்.