Skip to main content

''இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது'' - எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம்!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

vsaf

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்தக் கடிமான சூழலில் விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஜெயஸ்ரீயை அதிமுக கிளைச் செயலாளர் கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..

 

"10ஆம் வகுப்பு மாணவியைப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம். ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா. அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப் பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு. முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவி சிறுமிக்கும், மகளைப் பறிகொடுத்துப் பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்சத் தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்குக் கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களைக் கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்