ஜீவாவின் 'ஆசை ஆசையாய்', நட்டியின் 'மிளகா' உள்ளிட்ட படங்களை இயக்கியும் 'தேசிங்குராஜா', 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'ஜில்லா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ரவி மரியா.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ரவி மரியா, தென்மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், தனது பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனது பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியை உருவாக்கி, தன் நெருங்கிய நண்பர்களிடம் பணம் தேவைப்படுவதாக கூறி பணம் வாங்கியுள்ளனர். சில நண்பர்கள் நேரடியாக என்னிடம் தொடர்பு கொண்டு பணம் வேண்டுமா எனக் கேட்ட போது தான், இந்த மோசடி தெரிய வந்தது. எனவே தனது நண்பர்கள் எத்தனை பேர் பணத்தை இழந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
இந்த மோசடி சம்பந்தமாக இரும்புத்திரை என்று ஏற்கனவே ஒரு படம் வெளியானது. ஆனால் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று வந்தவுடன், இதனுடைய ஆழமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது. உண்மையிலே, இதை வைத்து எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் உருவாகியிருக்கு. இரும்புத்திரை படத்தில் 10 சதவீதம் இருக்கும். 90 சதவீதம் மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதனால் இதை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளேன்" என்றார்.