உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவே முடங்கியுள்ள நிலையில் தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி, அத்தியாவசியப் பொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதையடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் கஷ்டப்படும் குடும்பங்களுக்காக உதவி வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் தற்போது கேரள முதல்-அமைச்சரின் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கி இருக்கிறார். இதேபோல் தமிழ்நாட்டில் நடிகர் அஜித் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு 1.25கோடி நிதியும், சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.