வைரமுத்து, தமிழில் கிட்டத்தட்ட 7500 பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்தியாவில் ஏழு தேசிய விருதுகளை வாங்கிய ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில் வைரமுத்து இன்று(13.07.2022) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வைரமுத்துவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "அகவை எழுபதிலும் - இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என் நெஞ்சுக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து, பல்லாண்டு தமிழோடு வாழ்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ஒரு அறிக்கையையும் பகிர்ந்துள்ளார் முதல்வர். அந்த அறிக்கையில் "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்று இருந்திருந்தால் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார்கள். இன்னும் நீங்கள் இலக்கிய உச்சத்தைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கவிப்பேரரசாற்றுப்படை தொடரட்டும்." என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
அகவை எழுபதிலும் - இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு @vairamuthu அவர்களுக்கு என் நெஞ்சுக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து, பல்லாண்டு தமிழோடு வாழ்க! pic.twitter.com/DqNkbLnfYQ— M.K.Stalin (@mkstalin) July 13, 2022