இரட்டை இயக்குநர்கள் ஷ்யாம்-பிரவீன் மற்றும் 'மெமரீஸ்' படக்குழுவுடன் நக்கீரன் ஸ்டூடியோ சேனலுக்காக ஒரு ஜாலியான சந்திப்பு நடந்தது. அப்போது அவர்களின் எதிர்கால புராஜெக்ட் பற்றியும் ஐடியாக்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.
13 வருடங்களாக சினிமா எடுக்க வேண்டும் என்கிற துடிப்போடு, கதை மற்றும் தயாரிப்பாளர் செட்டாகி, படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களில் கோவிட் லாக்டவுன் ஏற்பட்டது. எதிர்காலம் குறித்த கேள்வி அந்தக் காலத்தில் இருந்தது. ஆனால் அந்த நேரத்தை ஸ்கிரிப்டில் சில மாற்றங்கள் செய்வதற்கு நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். அடுத்து என்ன நடக்கும் என்று மக்களை எதிர்பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல திரைக்கதை அமைந்தது
இந்தப் படத்தின் திரைக்கதையோடு ஆடியன்சால் ஒன்றி பயணிக்க முடியும். அவர்களும் தங்களைப் படத்தில் உள்ள ஒரு கதாபாத்திரமாக உணர்வார்கள். படம் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும். சரத்குமார் சாரின் 150வது படத்தையும் நாங்கள் தான் செய்துகொண்டிருக்கிறோம். மெமரீஸ் படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு விதமான இசையை வழங்கியிருக்கிறோம். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கிறது.
ஓடிடியின் வருகையால் மக்கள் பல்வேறு வகைகளிலான உலகப் படங்களைப் பார்க்க முடிகிறது. எங்களுடைய படத்தை மக்கள் புரிந்துகொள்வதற்கும் பல திரைப்படங்கள் பார்த்து அவர்களுடைய ரசனை மேம்பட்டது உதவிகரமாக இருக்கிறது. இதுவரை சைக்கலாஜிக்கல் திரில்லர் வகையிலான படங்கள் பல வந்துள்ளன. அவற்றுள் மக்களுடன் கனெக்ட் செய்ய முடிந்த படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஒரு படமாக மெமரீஸ் இருக்கும். புதிய விஷயம் ஒன்று இதில் இருக்கிறது. அது சஸ்பென்ஸ்.
இரட்டை இயக்குநர்களாக இருந்தாலும் எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. இருவருடைய கருத்துகளுக்கும் இருவரும் மதிப்பளிக்கிறோம். அனைத்தையுமே விரிவாக விவாதித்து தான் நாங்கள் செய்கிறோம். நீண்டகால நண்பர்களாக இருப்பதும் புரிதலுக்கு ஒரு முக்கியக் காரணம். கமல் சாரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாம் சினிமாவில் இப்போது சொல்ல முயற்சிக்கும் விஷயங்களை அவர் எப்போதோ சொல்லிவிட்டார். தமிழில் அங்காடித்தெரு, கோலிசோடா, விக்ரம் போன்ற படங்களை வியந்து பார்க்கிறோம். கார்த்திக் சாரோடு படம் பண்ண வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காகக் காத்திருக்கிறோம்.