
டேவிட் ஃபிஞ்சர் இயக்கத்தில் ஜெஸ்ஸி ஐசன்பெர்க் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தி சோசியல் நெட்வொர்க்’. இப்படம் மார்க் ஜுக்கர்பெர்க் உருவாக்கிய ஃபேஸ்புக் சமூக வலைதளம் உருவானது குறித்து பென் மெஸ்ரிச் எழுதிய ‘தி ஆக்சிடெண்டல் பில்லியனர்ஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இப்படம் குறித்து தனது கருத்துகளை சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் மார்க் ஜுக்கர்பெர்க் பகிர்ந்து கொண்டார். அதில் தன் கதை தவறாக காட்டப்பட்டுவிட்டதாக கூறினார். அவர் கூறியதாவது, “இப்படத்தில் ஒரு காதலியைக் கண்டுபிடிப்பதற்காக ஃபேஸ்புக்கை நான் உருவாக்கியது போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது அப்படி உருவாக்கப்படவில்லை. ஃபேஸ்புக் உருவாக்குவதற்கு முன்பாகவே நான் பிரிசில்லா சானுடன் காதலில் இருந்தேன்.
நான் காலேஜ் படிக்கும் போது ஃபேஸ்மேஷ் என்ற சமூக வலைதளத்தை உருவாக்கினேன். இதுதான் ஃபேஸ்புக் உருவாகுவதற்கு காரணம் என படத்தில் காண்பித்துள்ளனர். ஆனால் அதுவும் உண்மை இல்லை. இரண்டும் ஃபேஸ் என்ற வார்த்தையில் ஆரம்பிப்பதால் மக்கள் இரண்டையும் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். படம் பார்த்த போது உடை உள்ளிட்ட சிறு விஷயங்களில் கூட இவ்வளவு கவனத்துடன் செயல்பட்ட குழுவினர் ஃபேஸ்மேஷ் போன்ற பெரிய விஷயத்தை கவனிக்காமல் விட்டது விசித்திரமாக இருந்தது. அதோடு 21 ஆண்டுகளுக்குப் பிறகும், பலர் இப்படத்தில் காட்டப்பட்டுள்ள சில காட்சிகளை உண்மை என நம்புகின்றனர். குறிப்பாக ஃபேஸ்மேஷ் தான் ஃபேஸ்புக்கின் முன்னோடி என்ற கருத்தை இன்னும் பலர் நம்புவது விரக்தியாக இருக்கிறது. ஃபேஸ்மேஷ் வலைத்தளம் ஒரு சர்ச்சைக்குறியது. ஆனால் அதற்கு ஃபேஸ்புக்குடன் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
ஃபேஸ்புக் தொடங்கிய மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக்கை இணைத்து பின்பு இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்பையும் சேர்த்து நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.