கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ், மீட்புப் பணிகளை மிகத் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. கிராமங்களைச் சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுப்பாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையும் அவ்வளவு கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால், படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது.
ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர், குட்டக்கரை, தென்திருப்பேரை, மேலகடம்பா என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதைக் கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புப் பணிகளை மிகத் துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என வேதனையுடன் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியை டேக் செய்துள்ளார்.
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…— Mari Selvaraj (@mari_selvaraj) December 18, 2023