உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் ஆறுகளில் வெள்ளம் கரபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹிமாச்சலில் இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமானப்படையை சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிகப்பட்ட பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சத்ரா பகுதியில் கயாட்டம் என்ற மலையாள படத்தின் சூட்டிங் குழுவும் சிக்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.
இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கும் இந்த படத்தின் காட்சிகள் இமாச்சல பிரதேசத்தில் படமாக்கப்பட்ட போது மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நடிகை மஞ்சுவாரியர், சணல் குமார் சசிதரன் உட்பட மொத்தம் 30 பேர் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு மஞ்சுவாரியர், சேட்டிலைட் தொலைபேசி மூலம் தனது சகோதரரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதையடுத்து மஞ்சுவாரியரின் சகோதரர், கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு தகவல் அளித்துள்ளார். அவர் ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு தகவல் அனுப்பியுள்ளார். சத்ரா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மலையாள படக்குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தனுஷ் நடிப்பில் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.