பாஜக கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த அடாவடி சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. “ஜெய் ஸ்ரீராம்” என்ற பெயரில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருவதால் நாட்டில் குறிப்பிட்ட சில பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்காக திரைத்துறை. வரலாற்று ஆய்வாளர்கள் என்று 49 பிரபலங்கள் பிரதமருக்கு பொது கடிதம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை ஏற்க வேண்டும். இந்த தாக்குதலினால் பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் இசுலாமிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜெய் ஸ்ரீராம் வார்த்தைக்காகவும், பசுவுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விஷயம்.
2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில் கிட்டத்தட்ட 254 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மதங்களின் பெயரால் குற்றங்கள் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 840 குற்றச் சம்பவங்கள் தலித்துக்கு எதிராக மட்டுமே பதிவாகியுள்ளன என்று என்சிஆர்பி தகவலை அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை எழுதியது வேறுயாரும் இல்லை, பாலிவுட் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள்.
மதத்தின் பெயரால் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் 49 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என அனைவரும் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த பட்டியலில் மணிரத்தனம், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கொனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் போன்ற பெரிய பெயர்கள் உள்ளன.