மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மணிரத்னம், பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் தனது திரைப்படம் குறித்தும் கூறியதாவது, "தமிழில் முதல் முறையாக பெரிய நாவலை படித்தது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' தான். 5 பாகம் கொண்ட இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அதில் வரும் நிலப் பரப்புகள், குதிரைகள், கதாபாத்திரங்கள், பழுவேட்டரையரின் இரட்டை மீசை இதெல்லாம் என் மனதை விட்டுப் போகவே இல்லை.
கல்கி எழுதின விதம், உண்மையில் அவர் நம்முடன் பேசுவது போல் இருக்கும். அவர்கூடவே பயணித்த மாதிரி ஒரு அனுபவம். மணியம் சார் ஓவியம் இல்லாமல் இந்த புத்தகத்தை படித்திருக்க மாட்டார்கள். நம்மை அறியாமலேயே அதில் வரும் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை விதைத்திடும். அவரும் இந்த ஓவியத்திற்கு பின்னால் பெரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்.
5 பாக புத்தகத்தை இரண்டு பாகம் உள்ள திரைப்படமாக கொண்டு வருவதற்கு சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. நாவலில் உள்ள பெரிய நன்மை, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனதிலும் எந்த மாதிரியான எண்ணம் ஓடுகிறது என எழுத்து வடிவில் விரிவாக சொல்லிடலாம். ஆனால் அது திரைப்படமாக சொல்லும்போது அந்த நன்மை கிடையாது. அதனால், படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் முதல் முறை அறிமுகமாகும் போதே, அந்த கதாபாத்திரங்கள் எந்த சூழ்நிலையில் எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்தணும். மேலும் கதாபாத்திரங்களைப் பற்றி கேட்டுத் தெரிவதை விட பார்த்து தெரிய வேண்டியது மிக முக்கியம். அதற்காக சில மாற்றங்கள் தேவைப்பட்டது.
கல்கியின் தமிழ் அலங்கார தமிழ் இல்லை. அதனை நடிகர்களுக்கு நடித்துக் காட்டுவது கடினம். அதனால் மேடையின் தரம் ஈசியாக வந்துவிடும். இது, இன்றைய மக்களுக்கு புரியனும். மேலும் சோழர்கள் வாழ்ந்த காலத்தை குறிக்க வேண்டும். இந்த இரண்டும் தேவைப்பட்டது. இதை ஜெயமோகன் மிக எளிமையாக செய்தார். அது படமாக்கப்படும் போது பெரிதும் உதவியாக இருந்தது. தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் மீது ஒரு ஈர்ப்பு, பெரிய கொண்டாட்டம் இருந்தது. இந்தப் படம் எனக்கு மட்டுமில்லை நிறைய பேருக்கு கனவுப் படமாக இருந்திருக்கலாம்.
திரைப்படமாக உருவாக்கும்போது முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும் இரண்டாவது பாகம் புரியணும். அது தனியாகவும் இருக்கணும். சேர்ந்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கக் கூடும். புத்தகம் படித்த நிறைய பேர் இதனை சொந்தமாக்கிக் கொண்டனர். அது போலத்தான் நானும், எனக்கும் நிறைய விஷயங்கள் பிடித்திருந்தது. இதையெல்லாம் சேர்த்து நான் படமாக கொண்டு வந்தேன்" என பேசினார்.