கரோனா பெருந்தொற்றால் கடந்த வருடம் முழுவதும் முழு அடைப்பு விதிக்கப்பட்டு சர்வதேச எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாய் மாறியது.
தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துவருவதால், இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. அதேநேரம் அண்டை நாடுகளில் இன்னும் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்படாததால் தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை திறக்கப்படாமல் உள்ளது.
சில வாரங்களுக்குமுன் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது. கரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், அங்கு திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் தீவிர விஜய் ரசிகையான மலேசியாவாழ் தமிழ்ப் பெண் ஒருவர், எப்படியாவது விஜய்யின் மாஸ்டர் படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
எப்படியும் படம் பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்த விஜய் ரசிகை ஆஷ்லினா, மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். மேலும் சென்னை சத்யம் வளாகத்தில் உள்ள ஒரு தியேட்டரின் இருக்கைகளை முழுதாக புக் செய்து தனது நண்பர்கள், உறவினர்களுடன் மாஸ்டர் படம் பார்த்துள்ளார்.
இதுபற்றி ஆஷ்லினா கூறுகையில், “சிறு வயது முதலே நான் விஜய்யின் தீவிர ரசிகர். எப்போதும் விஜய் படங்கள் வெளியானதும் முதல் நாளே பார்த்துவிடுவேன். மாஸ்டர் படத்தையும் அப்படி முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், மலேசியாவில் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாததால் மாஸ்டர் படத்தைப் பார்க்க முடியாமல் போனது. அதனால் விமானம் மூலம் சென்னை வந்து சத்யம் தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்து ரசித்தேன்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “15 மாதங்கள் கழித்து தளபதியை வெள்ளித் திரையில் பார்க்கிறேன். தலைவா வேற லெவல்..” என்று பதிவிட்டுள்ளார்.