கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (22/07/2022) டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் மலையாள படமான அய்யப்பனும் கோஷியும் படம் சிறந்த இயக்குநர் - சச்சிதானந்தன், சிறந்த துணை நடிகர் - பிஜு மேனன், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது. மேலும் சிறந்த ஒலிப்பதிவு - விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர் (மாலிக்) படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமா நான்கு தேசிய விருதுகளை வென்று மலையாள திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது. இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "68வது தேசிய திரைப்பட விருதுகள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றியாளர்கள் பட்டியலில் மலையாள சினிமா தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு பெருமை அடைகிறேன். அபர்ணா பாலமுரளி, பிஜு மேனன், சென்னா ஹெக்டே, நாஞ்சியம்மா மற்றும் அனைத்து தகுதியான வெற்றியாளர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த சிறப்பு தருணத்தில் சச்சியை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றுமொரு பதிவில் "தேசிய விருது. அழகான பிறந்தநாள் பரிசு..பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா" என இன்று பிறந்தநாள் காணும் சூர்யாவிற்கு வாழ்த்தும், தேசிய விருது பெற்றதற்காக பாராட்டும் தெரிவித்துள்ளார். சூர்யா மம்மூட்டி பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்நது நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடிகர் மோகன்லால், "தேசிய திரைப்பட விருது பெற்ற அனைவருக்கும், குறிப்பாக சிறந்த நடிகர்களான சூர்யா, அஜய் தேவ்கன் மற்றும் அபர்ணா பாலமுரளி, பிஜு மேனன் மற்றும் நஞ்சியம்மா ஆகியோருக்கு இந்த தகுதியான அங்கீகாரத்திற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற அன்புள்ள சச்சியை பெருமையுடன் நினைவு கூர்கிறேன்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றுமொரு ட்விட்டர் பதிவில், "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்ற தற்செயல் நிகழ்வுகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள், அன்புள்ள சூர்யா" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா மோகன்லாலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Congrats to all the winners of #68thNationalFilmAwards.Absolutely proud to see Malayalam Cinema standing tall among the list of Winners. Proud of @Aparnabala2,Biju Menon,Senna Hegde,Nanchiyamma, and all the other deserved winners
Proudly Remembering #Sachy on this special moment— Mammootty (@mammukka) July 22, 2022