Skip to main content

படப்பிடிப்பிற்காகக் கட்டப்பட்ட வீடு - ஏழைக்குப் பரிசாகக் கொடுத்த படக்குழு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Makers Of Malayalam Film Anbodu Kanmani Gift House to family Built For Filming

மலையாளத்தில் அன்போடு கண்மணி என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. லிஜு தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தை விபின் பவித்ரன் தயாரித்துள்ளார். இதில் அர்ஜுன் அசோகன், அனகா நாராயணன், ஜானி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்க சாமுவல் ஏபி இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள தலக்சேரி பகுதியில் நடந்தது. அங்கு ஒரு ஏழ்மையான வீட்டில், அந்த குடும்பத்தினரின் அனுமதியோடு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பின்னர் கதைக்காக அந்த இடத்தில் ஒரு புது வீட்டையே கட்டியுள்ளனர். பின்பு அதில் படமெடுத்து, மொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் அந்த புது வீட்டை அந்த ஏழ்மையான குடும்பத்தினருக்கே பரிசாக வழங்கியுள்ளனர். அவர்களின் நிலைமை கருதி வீட்டை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

புது வீட்டின் சாவியை நடிகரும் முன்னாள் பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி, அந்த குடும்பத்தாரிடம் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் படக்குழுவினருக்கு பாராட்டும் குவிந்து வருகின்றது. 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ - மஞ்சும்மல் பாய்ஸின் ஓடிடி அப்டேட்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
manjummel boys ott update

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இயக்குநர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியிருந்தனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத்தின் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையெடுத்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனை படைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.