பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை 'காளி' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா காளி பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "என்னை பொறுத்தவரையில் காளி தேவி இறைச்சி உண்ணும், மதுபானத்தை ஏற்றுக்கொள்ளும். நீங்கள் மேற்கு வங்க தாராபித்தில் உள்ள சக்தி பீடத்திற்கு சென்று பாருங்கள். சாதுக்கள் புகை பிடித்துக் கொண்டிருப்பார்கள். அங்கு அதுதான் காளியின் வழிபாட்டு முறை. தங்களுடைய மத கடவுளையோ, தெய்வத்தையோ தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கற்பனை செய்ய அவரவருக்கு உரிமை உண்டு" எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரின் பேச்சுக்கும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.