Skip to main content

"2 நாட்களில் மக்கள் மறந்து விடுவார்கள்" - மாமன்னன் பட விவகாரம் குறித்து நீதிமன்றம்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

maamannan movie issue

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற 29 ஆம் வெளியாகவுள்ள நிலையில் உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே மாமன்னன் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மாரி செல்வராஜ் தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினரைச் சார்ந்த படங்கள் மட்டும் எடுத்து வருகிறார். அந்த வகையில் உதயநிதியை வைத்து அவர் இயக்கியுள்ள மாமன்னன் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் முன்னதாக வெளியாகியிருந்தது. அதில் இரு சமூகத்தினரிடையே நடக்கும் பிரச்சனையைக் காட்டும் விதமாகவே அமைந்துள்ளது. 

 

இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி தமிழ்நாட்டில் எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் உள்ளார். அவர் இப்படத்தில் நடித்துள்ளது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவுள்ளது. இப்படம் வெளியானால் இரு சமூகத்தினிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஓடிடி தளத்திலும் வெளியிடத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ‘பேச்சுரிமை, கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது’ எனக் கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் திரைப்பட தணிக்கைக் குழு அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இப்படம் வெளியாகி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் பார்ப்பதற்காகவே திரைப்படம். படம் பார்த்த 2 நாட்களில் மக்கள் மறந்துவிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்