தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன்.
என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான்.
என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.
சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.