தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறியப்படும் பிரபல காமெடியன் சுவாமிநாதனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டதில் இருந்து சிறுபகுதி பின்வருமாறு...
"நான் சிகப்பு மனிதன் தொடங்கி சிவாஜிவரை ரஜினி சாரின் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். சிவாஜி படத்தில் மியூசிக் ஸ்டோர் சீனில் நான் நடித்ததை பார்த்துவிட்டு ரொம்ப சீரியஸாக நடிக்கிறார் என்று ரஜினி சார் சொன்னார். எஸ்.ஏ.சி. இயக்கிய நான் சிகப்பு மனிதன் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்திருப்பேன். அந்த சீனில் 50 பேர் வரை இருப்பார்கள். என்னை முதல் பெஞ்சில் கோ டைரக்டர் உட்காரவைத்துவிட்டு போனார். உதவி இயக்குநர்கள் சிலர் அவர்களுடைய நண்பர்களை அழைத்துவந்திருந்தனர். அவர்களை முன்வரிசையில் உட்காரவைத்துவிட்டு என்னை பின்னாடி சென்று அமரச் சொன்னார்கள்.
எஸ்.ஏ.சி. டயலாக் பேச சொன்னபோது முன்னால் இருந்த யாருக்கும் டயலாக் பேசத் தெரியவில்லை. யாருடா இவனுகள கூட்டிட்டு வந்தது என்று கடுமையாக எஸ்.ஏ.சி. திட்ட ஆரம்பித்துவிட்டார். நான் எழுந்து, நான் சொல்றேன் சார் என்றேன். சரி சொல்லு என்றதும் டயலாக் சொன்னேன். உடனே என்னை அழைத்து முன்வரிசையில் உட்காரவைத்துவிட்டு, இவனுக்கு டைட்டா க்ளோசப் ஷாட் வைங்க என்று ஒளிப்பதிவாளரிடம் சொன்னார். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.
எனக்கு கேரக்டர் ரோலில் நடிக்க ரொம்ப ஆசை. ஆனால், கதைகளில் எங்காவது தொய்வு இருந்தால் மட்டும்தான் மனோபாலா, சிங்கமுத்து , என்னை மாதிரியான ஆட்களைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய கதாபாத்திரங்களுக்கு நான் தாங்குவேனா என்று சிலர் யோசிக்கிறார்கள். மாப்ள சிங்கம் படத்தில் ஒரு கேரக்டர் ரோல் பண்ணியிருந்தேன். அந்தத் தயாரிப்பாளருக்கும் முதலில் சின்ன தயக்கம் இருந்துள்ளது. இயக்குநர் உறுதியாக இருந்ததால் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். எடுத்த காட்சிகளைப் பார்த்தவுடன் ரொம்பவும் சிறப்பாக பண்ணிருக்கீங்க சார், உங்களைத் தவிர யாரும் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்று கூறி தயாரிப்பாளர் என்னைக் கட்டிப்பிடித்தார்.
டிவியில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களை சினிமாவில் ஒதுக்குகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. டிவியில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களும் திறமையானவர்கள்தான். அவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்".