Skip to main content

ஒருத்தருக்கு அஜித், ஒருத்தருக்கு விஜய்... கார்த்தி படமெடுத்தவர்களுக்கு அடித்த சான்ஸ்

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறந்த ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் பல புதுமுக இயக்குனர்கள் இயக்கிய படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பல தரமான சினிமா லாங்குவேஜ் படங்களும் வெளியாகின. அந்த வரிசையில் அந்த ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த மாநகரம் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை சொல்லலாம். 
 

vijay with lokesh

 

 

மாநகரம் படம், லோகேஷ் கனகாரஜ் என்ற புதுமுக இயக்குனரால் எடுக்கப்பட்டது. இந்த படம் வெளியானபோது அனைவருக்கும் பல ஆச்சரியம் இவ்வளவு அற்புதமான இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் எடுத்திருந்தாரா. நான்கு கதைகள் ஒரு இடத்தில் ஒன்றாக இணைகிறது போன்ற கடினமான திரைக்கதையை பார்க்கும் மக்களுக்கு மிகவும் எளிதாக உணரவைத்திருந்தார். 
 

கடந்த 2014ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த ஹெச்.வினோத்தின் இரண்டாவது படம்தான் தீரன் அதிகாரம் ஒன்று. முதல் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற அதனை அடுத்து கார்த்தியை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். இப்படமும் முதல் படத்தை போன்றே மிக உண்மைத் தன்மை கொண்டதாகவும், நிறைய ஆய்வுகள், பலரும் அறியாத லொக்கேஷன்கள் என்று புதுமையான ஒன்றை பார்க்கும் மக்களுக்கு விருந்தாய் கொடுத்தார்.

இவ்விரு இயக்குனர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன என்றால், தங்களின் இரண்டாவது படத்தை கார்த்தியை வைத்து இயக்கி அதனை அடுத்து மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து படம் பணிபுரிவதுதான் அந்த ஒற்றுமை. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி, வெளியான பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அது வெளியாகி வெற்றியும் பெற்றிருக்கிறது. அது வெளியாவதற்கு முன்பே அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்கத் தொடங்கிவிட்டார்.

 

ajith with h vinoth

 

 

மாநகரம் வெற்றியை தொடர்ந்து கைதி என்ற படத்தை கார்த்தியை வைத்து இயக்கினார் லோகேஷ். இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்குள்ளாகவே விஜய்யின் 64வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இந்த இரண்டு இயக்குனர்கள் இயக்கும் படங்களும் அடுத்த வருடம் கோடையில் வெளியாக இருக்கிறது. வீரம், ஜில்லா படங்கள் மோதிக்கொண்டதை அடுத்து இந்த இரண்டு படங்கள் அடுத்த வருடம் மோதிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 


 

சார்ந்த செய்திகள்