தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஒன்றாக ரிலீசாக உள்ளது. இந்த 2 படங்களுமே ஒரே சமயத்தில், ஒரே தேதியில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது. கடைசியாக இவர்கள் நடிப்பில் வெளியான வீரம் - ஜில்லா படத்தை அடுத்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் பொங்கலன்று ரிலீஸாகவுள்ளன.
இதையடுத்து, துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. மேலும், வாரிசு படத்தை, லலித்தின் 7 SCREEN STUDIO வெளியிடுகிறது. மேலும், வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பிறமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அந்தமான் தீவில் இருக்கும் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் மூன்று ஸ்கிரீன்கள் இருக்கிறது. அதில் தலா ஒரு ஸ்கிரீனில் துணிவு, வாரிசு படங்களைத் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் மீதமுள்ள ஒரு ஸ்கிரீனில் எந்தப் படத்தை திரையிடுவது என ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது.
இதனால், குழம்பிப் போன தியேட்டர் உரிமையாளர்கள், " உங்களுக்கும் வேணாம்... எங்களுக்கும் வேணாம்... பொதுவா டாஸ் போட்டு பாத்துறலாம். அதுக்கு அப்புறம் சங்கத்துக்கு கட்டுப்படணும்" என விஜய், அஜித் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு அவர்கள் சம்மதித்த நிலையில், இருதரப்பு ரசிகர்கள் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது.
அப்போது, எங்க அஜித்த தல'னு தான் கூப்பிடுவோம்... அதுனால எங்களுக்கு தலதா வேணுன்னு கேட்க., அதற்கு பதிலளித்த விஜய் ரசிகர்கள், நீங்க தல னா... நாங்க பூ ’னு ஒத்துக்கொண்டனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் போடப்பட்ட டாசில் தல விழுந்ததால் மீதமுள்ள ஸ்கிரீனில் துணிவு படத்தை வெளியிட முடிவு செய்தனர். இதனால் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தனர்.