பிரேசிலின் அமேசான் மழைக் காடுகள் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான காட்டுத் தீயினால் மிக மோசமான அழிவை சந்தித்து வருகின்றது. இந்த சம்பவம் உலக அளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார முன்னேற்றத்திற்காக புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என கூறி ஏற்கனவே பிரேசில் அரசு கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக மழைக்காடுகளை அழித்து வருகிறது. இதனை எதிர்த்து அங்குள்ள பூர்வகுடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக கடுமையான காட்டுத்தீ, வனப்பகுதி முழுவதையும் அழித்து வருகிறது.
உலகின் தேவைக்கான ஆக்சிஜனில் 20 சதவீத அளவை இந்த அமேசான் காடுகள் தான் உற்பத்தி செய்கின்றன. கடந்த ஆகஸ்ட் 15 க்கு பிறகு மட்டும் 9,000க்கும் அதிகமான தீ விபத்துகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 80% அதிகமாகும். அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துகள் பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் பலரும் பிரே ஃபார் அமேசான் என்று ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
“உலகின் தேவைக்கான மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்யக்கூடிய இந்த கிரகத்தின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இது பூமியன் நுரையீரல் போன்றது. இது கடந்த 16 நாட்களாக காட்டு தீயால் அழிந்து வருகிறது” என்று தன்னுடைய வேதனையை பதிவிட்டுள்ளார் டைட்டானிக் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோ. இதனை தொடர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார். தற்போது சுமார் 5 மில்லியன் டாலர் நிதியை அமேசான் மழைக்காட்டை பாதுகாப்பதற்காக கொடுத்திருக்கிறார். அவரின் நண்பர்களான் லாரன் பவல், பிரியன் செத் ஆகியோருடன் இணைந்து இந்த தொகையை வைத்து ஒரு புதிய அமைப்பு அமேசான் காட்டை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட இருக்கிறதாம்.
இவர் உலகில் நடக்கின்ற பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஆஸ்கார் மேடையில் விருது வாங்கிய உடனேயே அவர் தெரிவித்தது பருவநிலை மாற்றம் குறித்துதான். இப்படி இயற்கையில் பேரன்பு கொண்டவராக திகழ்கிறார். சென்னையின் வறட்சி குறித்தும் நிலத்தடி நீர் பற்றாக்குறை பேசியுள்ளார்.