லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. உலகம் முழுவதும், முதல் 7 நாட்களில் ரூ.461 கோடியும் 12 நாட்களில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில் மாலை 7 மணிக்கு மேல் விழா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொள்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரங்கத்தில் வெளியில் மதியம் முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ளனர்.
மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை இந்த விழாவிற்கு அனுமதித்த நிலையில், தற்போது நிகழ்ச்சிக்கு டேக் மற்றும் ஆதார் அட்டை மூலம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்ட ரசிகர்களை மட்டுமே உள்ளே அனுமதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருவதாக கூறப்படுகிறது. வாட்டர் பாட்டில், எளிதில் தீ பற்றக்கூடிய பேனர்கள் மற்றும் ஃபிளக்சுகள், விஜய் மக்கள் இயக்க கொடி உள்ளிட்டவைகளை உள்ளே எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த சோதனைகளை எல்லாம் கடந்து உள்ளே சென்று, நிகழ்ச்சியை காண தயாராகியுள்ளனர்.