முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என தொடர்ச்சியாக மனு கொடுத்த நிலையில் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வந்துள்ளார். இது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என செந்தில் பாலாஜியை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், “அங்கே பிஜேபி வச்சிருக்கும் அதே மாடல் ‘ஊழல் கறை நீக்கிற மந்திர வாசிங் மிஷின்’ இங்க தமிழ்நாட்டில நாங்களும் வைச்சிரும்லோ… உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” எனப் பதிவிட்டுள்ளார்.
அங்கே பிஜேபி வச்சிருக்கும் அதே மாடல் “ஊழல் கறை நீக்கிற மந்திர வாசிங் மிஷின்” இங்க தமிழ்நாட்டில நாங்களும் வைச்சிரும்லோ… உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!#SenthilBalaji #உழல்_கறை_நீக்கும்_மந்திர_வாசிங்மிஷின்
pic.twitter.com/gBh8hM7qVS— leninbharathi (@leninbharathi1) September 26, 2024