லோகேஷ் கனகராஜ், தனது படங்களில் கைதி படத்தின் கதையை விக்ரம் படத்துடன் தொடர்புப்படுத்தி இயக்கியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் அதற்கு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்(எல்.சி.யு) என ரசிகர்கள் அழைத்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடைசியாக அவர் இயக்கிய லியோ படத்திலும் கத்தி படத்தில் வந்த போலீஸ் கதாபாத்திரத்தை இணைத்திருந்தார்.
இப்போது ரஜினியை வைத்து கூலி என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அவர் இயக்கத்தில் வெளியான கைதி, இன்றுடன் வெளியாகி 5 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட லோகேஷ் யூனிவர்ஸ் உருவாக்க இந்தப் படம்தான் காரணம் என படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போது எல்.சி.யு. தொடர்பான புது அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதாவது, எல்.சி.யு.-வின் முன்னுரை குறித்து ஒரு 10 நிமிட குறும்படம் உருவாக்கவுள்ளதாகவும் சேப்டர் ஜீரோ என்ற தலைப்பில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கையும் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் ஒரு கன் ஷாட், இரண்டு கதைகள், இருபத்தி நாளு மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்து எல்.சி.யு. கதாபாத்திரத்தில் இருக்கும் நரேன், கடந்த வருடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.