ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ படம் வசூல் ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து காஞ்சனா-4 படத்திற்கு ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
![lawrence](http://image.nakkheeran.in/cdn/farfuture/7Yd4FngZtQxhR6RJ_Hf3Y48k90130ej0tSlMQDHf9lM/1556255417/sites/default/files/inline-images/lawrence_2.jpg)
ராகவா லாரன்ஸ் முனி படத்தை இயக்கி வெற்றிபெற்றதை அடுத்து, காஞ்சனா என்றொரு காமெடி கலந்த பேய் படத்தை இயக்கினார். இது அவருக்கு பெரு வெற்றியை கொடுத்தது. இதனை அடுத்து காஞ்சனா-2, தற்போது காஞ்சனா-3 என்று மூன்று பாகங்கள் வரை வெளியாகியுள்ளது. இந்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக நல்ல சாதனையை படைத்திருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி வெளியான காஞ்சனா-3 படம், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், விமர்சகர்கள் பலரும் இப்படத்தை ஆதரிக்கவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் 4-ம் பாகத்தை இயக்கி, நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனமே இதனையும் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது. 'காஞ்சனா 3' தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராகவா லாரன்ஸ் காஞ்சன வெளியாகி எட்டு ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்குகிறார். இந்த படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, காஞ்சனா-4 பணிகளைத் தொடங்கவுள்ளார்.
ஒவ்வொரு காஞ்சனா படத்தின் பாகத்தையுமே பொருட்செலவு ரீதியில் அதிகரித்து வரும் லாரன்ஸ், காஞ்சனா-4 பாகத்தை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.