மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதன்படி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மன்சூர் அலிகான். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு பதிவிட்ட பதிவு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார், குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து விசிக சார்பில் துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறினார். அவர் பேசியதாவது, “அரசு குறிப்புகளில் சேரி என்ற வார்த்தை இருக்கு. வேளச்சேரி, செம்மஞ்சேரி போன்ற வார்த்தைகளில் சேரி என்பதற்கு என்ன அர்த்தம். என்னை பொறுத்தவரை எந்த பகுதியில் வாழுகிற மக்களாக இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேறக் கூடிய உரிமைகள் இருக்கு. அவர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என சொல்வதற்கு நான் விரும்பவில்லை. நான் எந்த காரணத்திற்காகவும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. அப்படி என்னால் பேசவும் முடியாது. சேரி என்று கூறியதற்காக நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
நான் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். அதனால் எனக்கு தெரிந்த பிரச்ஞ் மொழியில் பதிலளித்தேன். அதுமட்டுமல்லாமல் என்னுடைய பதிவில் எப்போதுமே சர்காஸம் இருக்கும். அதுபோலத்தான் அதை பயன்படுத்தினேன். ஆனால் அதற்கு திமுகவிலிருந்து ஒருவர் என்னை தகாத வார்த்தையை குறிப்பிட்டு பதிவிட்டார். உடனே அதை டெலிட் செய்துவிட்டார். அதை பார்த்து காங்கிரஸ் கேள்வி கேட்க முடியவில்லை. ஆனால் நான் பேசிய வார்த்தைக்கு இவ்ளோ ஆக்ரோஷமாக பேசுகிறார்கள். திரௌபதி முர்மு பதவி ஏற்றபோது தீய சக்தி என சொன்னவர்கள் காங்கிரஸ் கட்சியினர். என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக சொன்னார்கள். நானும் காத்துக்கொண்டிருந்தேன். ஒருத்தரையும் காணோம். நான் திமுக காரர்களுக்குத்தான் பதிவிட்டேன். திடீரென காங்கிரஸ் ஏன் பொங்கி வருகிறார்கள்.
மணிப்பூர் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு நான் தூக்கு தண்டனை கொடுக்க சொன்னேன். அப்போது தேசிய மகளிர் ஆணையம் சார்பாக மே மாதமே நடவடிக்கை எடுத்தோம். தேசிய மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் வந்தால் மட்டுமே அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். த்ரிஷா விவகாரத்தில் புகார் வந்தது அதனால் நடவடிக்கை எடுத்தோம். தாமாக வந்து எடுக்கவில்லை. பிரதமர் மோடி குறித்து நான் பதிவிடாத விமர்சனமா. இதுவரை அதை நான் டெலிட் செய்தது கிடையாது. பதிவு செய்தால் அது செய்ததுதான். பயந்துட்டு பின் வாங்கக் கூடிய ஆள் குஷ்பு கிடையாது” என்றார்.