Skip to main content

“என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” - குஷ்பு திட்டவட்டம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

kushboo about cheri issue

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதன்படி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மன்சூர் அலிகான். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு பதிவிட்ட பதிவு பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

 

எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பாகவும் விசிக சார்பாகவும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பேசிய குஷ்பு, “எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன். ஊர் பெயர்களிலும் சேரி என்ற பெயர் உள்ளது. சேரி என்ற பேச்சுக்காக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. எந்த இடத்திலும் தகாத வார்த்தையை பயன்படுத்துவது இல்லை” எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்