ராயன் படத்திற்கு பிறகு ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் அவர் இயக்கும் ‘இட்லி கடை’ படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார்.
இதில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் உருவாகிறது. இவர் ஏற்கனவே தனுஷை வைத்து அங்கு ராஞ்சனா(தமிழில் அம்பிகாபதி) மற்றும் அத்ரங்கி ரே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படம் மூலம் மூன்றாவது முறையாக தனுஷை இயக்குகிறார். இப்படம் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. ‘ஏ கலர் எல்லோ புரொடைக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது. அதில் இப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
இதையடுத்து எந்த அப்டேட்டும் இப்படம் குறித்து வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. படக்குழு கீர்த்தி சனோன் இப்படத்தில் இணைந்துள்ளதாக ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கீர்த்தி சனோன் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்படுகிறது. அவர் முக்தி(Mukti) என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வருகிற நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.