‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’, ‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் உயர்ந்து நிற்பது திருக்குறளும் அதை எழுதிய திருவள்ளுவரும். ஜனவரி 16-ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்பதே யாருக்கும் தெரியாததால் பல வகைகளில் அவரை வரைந்து வைத்திருக்கிறார்கள்.
கையில் எழுத்தாணியுடனும் ஓலைச்சுவடியுடனும் சடாமுடியுடன் வெண்ணிற உடை உடுத்திய திருவள்ளுவரைத்தான் அரசு அலுவலகங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், பாஜக தரப்பில் வெளியிடப்படும் வாழ்த்துச் செய்திகளில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி நெற்றியில் பட்டையிட்டு வாழ்த்துத் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு டெல்லியில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். ஒவ்வொரு தமிழனின் பெருமையையும் உலகமே கொண்டாடும் கவிஞனையும் போற்றுவோம் என்று தனது ட்விட்டர் பதிவில் கோட்ஷூட் போட்ட ஸ்டைலான கெத்தான திருவள்ளுவர் படத்தை பதிவிட்டிருக்கிறார். தான் சார்ந்த கட்சி பயன்படுத்திய திருவள்ளுவரைப் பயன்படுத்தாமல் ஸ்டைலான திருவள்ளுவரை பயன்படுத்தியதற்காக கட்சியினரிடையே விமர்சனமும் ரசிகர்களிடையே பாராட்டும் என இருவிதமான விமர்சனங்களைப் பெற்று வருகிறார்.