பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். 10 ஆண்டுகளுக்கு முன்பு உ.பியின் முக்கிய கட்சிகளுள் ஒன்றான சமாத்வாதி கட்சியில் இணைந்து தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கினார். இருப்பினும் அவர் தோல்வியை தழுவிய நிலையில் அரசியலில் இருந்து அப்போதே விலகினார்.
இந்நிலையில் 60 வயதான சஞ்சய் தத் மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக மகராஷ்டிர மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ச்சித்துறை அமைச்சர் மகாதேவ் ஜங்கர் தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜகவின் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய சமாஜ் பக்ஷ் (RSP) கட்சியில் தலைவரான ஜங்கர், சஞ்சய் தத் தங்கள் கட்சியில் வரும் செப்டம்பர் 25ம் தேதியன்று இணைய உள்ளதாக கூறினார்.
சஞ்சய் தத்தின் தந்தையான மறைந்த நடிகர் சுனில் தத், மும்பை வடக்கு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
சஞ்சய் தத் தற்போது சினிமாவில் கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக நடிக்கிறார். கலங்க் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வசூலில் சோபித்தது.