கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மலையாள முன்னணி நடிகர் திலீப் குமார் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரிக்கப் பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலையாள திரைத்துறையின் பெண்கள் அமைப்பினர் அம்மாநில முதல்வருக்கு மனு அளித்திருந்தனர்.
பின்பு 2018ஆம் ஆண்டு திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் உள்படப் பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தி 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தகவல் உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது. ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று பிரபல மலையாள தயாரிப்பாளர் சஜிமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது கேரள உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பரபரப்பான தகவல்கள் மற்றும் சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு பரவியிருக்கிறது. பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள். பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மலையாள திரையுலகத்தை மாஃபியா கும்பல் கட்டுப்படுத்துகிறார்கள். முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுத்தால் மிரட்டப்படுகிறார்கள். நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட பட்டியலில் முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இயக்குநர்கள் மீதே அதிக புகார்கள் இருக்கிறது. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “நடிகர் நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம் போக்குவரத்தைத் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மதுபானம், போதைப்பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என பரிந்துரைக்கப் பட்டுள்ளது.