குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மோலிவுட் என்று இந்திய திரையுலக இருக்கும் பல பிரபலங்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள திரைத்துறையை சேர்ந்த நடிகை நினிஷா சஜயன், இயக்குனர்கள் ராஜீவ் ரவி, ஆசிக் அபு, நடிகை ரீமா கலீங்கல் உள்ளிட்டவர்கள் கொச்சியில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட திரைத்துறையினரை மிரட்டும் தொனியில் கேரள பாஜக இளைஞர் அணி பொதுச் செயலாளர் என். சந்தீப் வாரியர் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “திரைத்துறையினர் தாங்கள் வருமான வரிகள் செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், வருமானவரி மற்றும் அமலாக்க இயக்குனரகம் கவனத்தில் கொள்ளும்” என குறிப்பிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்திருப்பது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பா.ஜனதா பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ் கூறும்போது, கட்சிக்கும், சந்தீப் வாரியர் கருத்துக்கும் தொடர்பு இல்லை என்கிற ரீதியில் கருத்து வெளியிட்டார். அப்போது அவர், “சந்தீப் வாரியர் கூறியது அவரது சொந்தக்கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல. ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கருத்துக்களை கூற உரிமை உண்டு. அவற்றை வெளிப்படுத்த சமூக வலைத்தளங்கள் ஒரு தளமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிப்பட்ட கருத்துக்களை கட்சியின் கருத்துக்களாக கருத முடியாது” என கூறினார்.