மறைந்த முன்னால் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் உருவாகி வரும் படம் தமிழிலும் 'நடிகையர் திலகம்' என உருவாகி வருகிறது. இதில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். மற்றும் பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார்.
இந்நிலையில் வரும் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது விழாவில் இப்படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியபோது, "நடிகையர் திலகம் திரைப்படம் உருவாக காரணம் இயக்குனர் நாகி மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா. இப்படத்தின் கதையை கேட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லை. நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தது. நிறைய நல்ல படங்களில் தற்போதுதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். 'சிறந்த நடிகையின் வாழ்க்கை, நிறைய பேருக்கு அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியும், எப்படி நம்மால் நடிக்க முடியும்?' என்று நினைத்தேன். இயக்குனர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்.
‘தொடரி’ படத்தை பார்த்துதான் இயக்குனர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘தொடரி’ படம் எனக்கு ஏதாவது நல்லது பண்ணும் என்று நடிக்கும் போது நினைத்தேன். ஆனால், அப்படம் வெளியான பிறகு சில பேர் வாழ்த்தினார்கள், பல பேர் குறை சொன்னார்கள். ஆனால், அந்தப் படம் தான் எனக்கு தற்போது ‘நடிகையர் திலகம்’ என்ற படத்திற்கு பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் எனக்கு 3 மணிநேரம் கதை சொன்னார். இதுவரைக்கும் எந்த படத்தின் கதையும் 3 மணி நேரம் கேட்டதில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்து அவர் கதை சொல்லும்போது. படக்குழுவினர் அனைவரும் சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். மே 9ம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்" என்றார்.