தாமரைச்செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, முனிஸ்காந்த், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள நதி திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகை கயல் ஆனந்தி பேசுகையில், “மதுரையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் நதி. இயக்குநர் இரண்டு மணி நேரம் கதை சொன்னார். கதை கேட்ட உடனேயே இந்தப் படத்தில் நாம் நடித்தால் நல்லா இருக்கும் என்றும் தோன்றியது. இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். நிச்சயம் நதியும் அந்த வரிசையில் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக இருக்கும்.
நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேனா என்று கேட்கிறார்கள், நல்ல கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நான் நடிப்பேன். எண்ணிக்கையளவில் நிறைய படங்கள் நடிப்பதைவிட நல்ல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், நல்ல கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால் நடித்துக்கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.