பிரதமர் மோடி தாய்லாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். அதை பாராட்டும் வகையில் தமிழக பாஜக ட்விட்டரில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, திருநீர் பூசப்பட்டதுபோன்ற உருவத்தில் டிசைன் செய்து பதிவிட்டிருந்தனர்.
இது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. திருவள்ளுவர் எந்த மதத்தையும் சேர்ந்தவர் இல்லை. அவர் அனைவருக்கும் பொதுவானவர். பாஜக அவருக்கு மதச்சாயம் பூசுகின்றது என்று பாஜகவின் பதிவிற்கு எதிர்ப்பு வந்தது. இரண்டு நாட்களாக இந்த சர்ச்சை அனைத்து ஊடகங்களில் விவாதங்களாகியது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலையில் மை பூசப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல. இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா?” என்றார்.