இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “ஏப்ரல் 5- ஆம் தேதி ஞாயிறன்று இரவு 09.00 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள். பல்ப்புகளை அணைத்து விட்டு, வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்; டார்ச் லைட் அல்லது செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்.
கரோனாவால் மக்கள் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்துக்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும். ஒரேநேரத்தில் ஒளியேற்றுவதன் மூலம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் எனக் காட்டுவோம். வெளியே வராமல் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் மக்கள் ஒளியேற்றலாம்” என்றார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்கு தொழில்நுட்ப ரீதியாக பேசாமல் இப்படி விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் பேசுகிறாரே என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மோடியின் ஆதரவாளர்கள் தங்களின் ஆதரவை வழுவாக காட்டுவோம் என்று சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி, மோடியின் இந்த வேண்டுகோளுக்கு நகைச்சுவையாக ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் நடித்த ‘ஆத்மா’ என்ற படத்திலிருந்து விளக்கு வைப்போம் என்ற பாடலை பகிர்ந்து, நாங்கல்லாம் அப்பவே சொன்னது... என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.