தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' படம் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை மேக்னா ராஜ் கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர். இவர் கன்னட நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகனான சிரஞ்சீவி சர்ஜாவைக் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் மேக்னா பிஸியாக சினிமாக்களில் நடித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி மேக்னாவின் கணரான நடிகர் சிரஞ்சீவிக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவைக் காப்பாற்ற முடியவில்லை. 39 வயதான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிரஞ்சீவி சர்ஜாவின் இந்தத் திடீர் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரின் மறைவிற்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி, "என்ன என்ன!!?? என்ன??? வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சியில் உள்ளேன். சிரஞ்சீவி சர்ஜா போன்ற ஒருவர் எப்படி இறக்க முடியும்? அதுவும் 39 வயதிலா? கடவுளே! இதை எப்படி மேக்னாவால் எதிர்பார்த்திருக்க முடியும். இது மிகவும் கொடூரமானது'' என சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.