உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி மூன்றாவது படமாக நயன்தாராவை வைத்து ‘கொலையுதிர் காலம்’என்னும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு பேசுகையில், “திரையுலகில் வெளிப்படையாக தொழில்நுட்பங்களை பற்றி சொல்கிறோம் என்றால் அது மிகவும் நல்லது. அதனால் வெளியிலிருந்து பலர் இந்த துறைக்கு வரக்கூடும். ஓ இது இவ்வளவு எளிமையானதா? அவ்வளவுதான் ஒளிப்பதிவா, அவ்வளவுதான் திரைக்கதையா? சினிமா எடுப்பது என்பது அவ்வளவு சிக்கல் இல்லையா? அப்படி தெரிந்தால் பல நூறு இளைஞர்கள் சினிமாவுக்குள் வரக்கூடும். அதனால் இவைகள் வெளியுலகத்துக்கு தெரிவது மிகவும் நல்லது. ஆனால், ஒரு தயாரிப்பாளருக்கும் இன்னொரு தயாரிப்பாளருக்கும், தயாரிப்பாளர் சங்கத்தில் நடப்பது வெளியில் தெரிந்தால் யாராவது சினிமாவுக்குள் வருவார்களா?
எனக்கு என்ன பயம் என்றால் ஸ்டார் போலரைஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேர்தான். ஒருவருக்கு மொழி புரியவில்லை என்றாலும் உணர்ச்சிகள் புரியும், அந்த மூன்று பேரும் ஆஹா பெரிய ரிஸ்க் எடுத்துவிட்டோம் என்பது போலவே இருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஒரு காட்சி வரும், வெள்ளைக்காரனை எதிர்த்து வ.உ.சி தன் சொந்த செலவில் கப்பல் வாங்கிவிடுவார். பிறகு அவரை ஆங்கிலேயர்கள் சிறைப்பிடித்துவிடுவார்கள். அவர் சிறைக்கு சென்றபின், அந்த கப்பலை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து விற்றுவிடுவார்கள். சிறையில் செக்கு இழுத்து மிகவும் கஷ்டப்பட்டு, பின்னர் விடுதலையாகி வெளியே வருவார். இன்னும் கப்பல் ஓடுகிறது என்ற நினைப்பில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருவார் வ.உ.சி. அப்போது ஒருவர் வாயை துண்டு வைத்து மூடி அழுதுக் கொண்டு இருப்பார். ஏன் அழுகிறாய் என்று வ.உ.சியாக நடிக்கும் சிவாஜி கேட்டவுடன், ‘இந்த பாவிகளை நம்பியா கப்பலை வாங்குனீங்க’என்று சொல்வார். அந்த மாதிரி மொழி தெரியாம வந்திருக்கிற மூன்று பேர ஆளாக்கிறுவீங்கப்போல” என்று தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி அந்த மேடையில் பேசியவர்கள் குறித்து கலகலப்பாகபேசினார்.
மேலும் பேசியவர், “இந்த படத்தின் மேல் இருக்கும் கவனம் நயன்தாராதான். ஆனால், அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. வேறு ஏதோ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு மதியழகன் அழைப்புவிடுத்தார் அதனால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். வந்தபின்புதான் தெரிந்தது சக்ரி டோலட்டி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்று. அவரும் வேறு வேலை இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்றார்கள். நயன்தாரா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றவுடன் ஒரு வகையில் நான் சந்தோஷப்பட்டேன். ஏன் என்றால்? நயன்தாரா வந்திருந்தால் சுசீந்திரன் நாளைக்கு நயன்தாராவையும் அரசியலுக்கு வர அழைப்புவிடுத்திருப்பார். அவர் யாருக்கு கூட்டம் கூடினாலும் அவர்களை அரசியலுக்கு வர அழைப்புவிடுகிறார்” என்றார்.
“இதுபோன்ற காலத்தில் தயாரிப்பாளர்கள் எல்லாம் காவலாளிகள் போல வெளியே நிற்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள். நாட்டினுடைய பிரதம மந்திரிகள் எல்லாம் காவலாளிகளான காலம் இது. ஐந்து வருடத்திற்கு முன்பு உள்ளே போகும்போது மீண்டும் உங்களிடம் வருவேன். மக்களாகிய நீங்கள்தான் எனக்கு மார்க் போடுவீர்கள், அந்த பிராக்ரஸ் ரிப்போர்ட்டு உங்களிடம்தான் உள்ளது என்றார். ஆனால், இப்போ பிராக்ரஸ் கார்டை பற்றி கேட்டால் காவலாளி என்கிறார். தயாரிப்பாளர்கள் காவலாளிகளாக இருப்பது தற்போது முக்கியமல்ல, நாட்டினுடைய காவலாளி யார் என்று முடிவு செய்யும் நேரம் இது. இங்கு நடப்பவை அனைத்தையும் மாற்றிவிடலாம். ஆனால், அவர் மாறவே மாட்டார். அங்கேயே உட்கார்ந்துக்கொள்வார். இதனால் அது மிகவும் முக்கியம்” என்று இறுதியாக தயாரிப்பாளர் சங்க பிரச்சனை பற்றியும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார்.