கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் ‘கார்த்தி25’ என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேரக் கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்ட விழா நடைபெற்றது.
இந்தநிகழ்வில் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, அனு இம்மானுவேல், கே.எஸ். ரவிகுமார், ராஜ்கிரண், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் ரித்விக், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா. ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ். மித்ரன், ஹெச். வினோத், சுராஜ், சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர் சதீஷ், ஜித்தன் ரமேஷ், சக்திவேலன், தயாரிப்பாளர்கள் லட்சுமன், கே.ஈ. ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், பொன்வண்ணன், பவா செல்லத்துரை, அனல் அரசு, பாண்டியன் மாஸ்டர், திலீப் சுப்பராயன், நடன இயக்குநர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் நந்தா, இயக்குநர் ஆர். ரவிக்குமார், தயாரிப்பாளர் தியாகராஜன், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் எனவும் வாழ்க்கையில் இந்த உயரத்தை தந்த மக்களின் வாழ்க்கையில் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காகவும் ரூ.1 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டது. 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியும், தேவைப்படும் பள்ளிகளுக்குத் தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூபாய் 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.