சூர்யா திரைப்படங்களை தவிர்த்து அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட பல உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அகரம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 45வது ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் படிக்கும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் கார்த்தி பேசுகையில், “நான் 2 வயதாக இருக்கும்போது இந்த அறக்கட்டளை தொடங்கியது. எது பண்ணினாலும் தொடர்ந்து பண்ணுகிற மாதிரி இருக்க வேண்டும், ஆரம்பித்து நிறுத்த கூடாது என சின்ன வயதில் எங்கள் ஆத்தா சொல்லுவார்கள். ஆனால் தொடர்ந்து பண்ணுவது அவ்வளவு இலகுவாக இருக்காது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வீட்டில்தான் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி நடக்கும். அப்போது மாநில அளவில் மற்றும் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களை தேடுவது பெரிய வேலை. ஆனால் இப்போது கையில் மொபைல் இருப்பதால் அவர்களை சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாம். அப்பாவின் 100வது படம் முடியும்போது, அந்த 100 தயாரிப்பாளர்களையும் அழைத்து, எம்.ஜி.ஆர். தலைமையில் கேடயம் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் அப்பாவை அறிமுகப்படுத்திய இயக்குநர்களோடு, அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த கமல்ஹாசனும் பங்கேற்று அப்பாவை பாராட்டி பேசினார்.
அந்த நிகழ்ச்சி முடியும்போது ஒரு படத்திற்காக வாங்கிய மொத்த சம்பளத்தையும் வங்கியில் டெபாசிட் பண்ணி கொடுத்துள்ளார். பெரிதாக காசுக்கு ஆசைப்படாதவராக எங்கள் அப்பா இருந்துள்ளார். உறவினர்கள் வருகிற காசை கூட வேண்டாம் என சொல்கிறார் என்று அவரைக் கிண்டல் பண்ணுவார்கள். அது குறித்து அவர் கவலைப்படவில்லை, அப்படித்தான் வாழ்ந்துள்ளார். அந்தப் பணத்தை போட்டு அதில் வரும் வட்டியை எடுத்து பரிசு வழங்கியுள்ளார். முதல் பரிசு ரூ.1000, 2வது பரிசு ரூ.750, 3வது பரிசு ரூ.500 எனப் பரிசுகள் கொடுத்தார்.
1979-இல் தங்கம் எவ்வளவு விலை இருக்கும் என யோசித்து பார்த்தால், அது ரூ.750 இருந்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை சவரன் தங்கம் வாங்ககூடிய அளவிற்கு பரிசுத்தொகை கொடுத்துள்ளார். அப்போது தொடங்கி 25 வருடம் வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் எங்கிருந்தாலும் அப்பாவிடம் வந்து பரிசு வாங்கிக்கொண்டு செல்வார்கள். நாங்கள் வெளியூரில் சூட்டிங் சென்றால் அங்கு அப்பாவின் படங்களைப்பற்றி பேசாமல், அவர் கல்விக்காக உதவுவதை பற்றி பேசுவார்கள். அதை தொடர்ந்து செய்து வந்த பிறகு, அகரம் அறக்கட்டளை அதை எடுத்து பண்ண ஆரம்பித்தது. அகரத்தின் மூலம் அதை செய்யும்போதுதான் தெரிந்தது, வெறும் முதல் மதிப்பெண் எடுத்தது மட்டும் கிடையாது, அவர்கள் எங்கு இருந்து அந்த முதல் மதிப்பெண் எடுத்தார்கள் என்ற புரிதல் வந்தது. ஒவ்வொரு பசங்களும் அவர்களின் பின்னணியை பற்றி சொல்லும்போது, எங்கள் அப்பா எங்கிருந்து வந்தார் என்பதை யோசிக்க முடிகிறது. எங்களால் அப்படி சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் அப்பாவுக்கு பையனாக பிறந்ததில் ஆசிவதிக்கபட்டவர்கள் என்றும், போன ஜென்மத்து புண்ணியம் என்றும்தான் சொல்ல முடியும். அப்படியே இருந்தாலும் எதுவும் தெரிந்துகொள்ள முடியாமல் இந்த இடத்திற்கு வந்துவிட முடியாது. அதற்கு கடின உழைப்பு தேவை. எல்லோரும் உழைத்துதான் வரமுடியும், எந்த விலையும் கொடுக்காமல் எதுவும் கிடைக்காது. அந்த விலை பணம் கிடையாது, அது தூக்கமாக இருக்கலாம், சந்தோஷமாக இருக்கலாம். இங்கு இருக்கும் அனைவரும் எதையோ விலை கொடுத்துதான் அவர்கள் படித்து இங்கு வந்துள்ளார்கள்.
அகரம் மூலம் பசங்களை சிட்டியில் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அவர்கள் ஊரிலுள்ள கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என நினைத்தால், அங்கு இருக்கும் அளவிற்குதான் அவர்களுக்கு கல்வி அறிவு இருக்கும். ஆனால், அவர்கள் சென்னையில் வந்து படிக்க வேண்டும் என அகரம் எடுத்த முடிவைப்பற்றி பிறகுதான் அந்த புரிதல் வந்தது. ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது. இங்கு வந்த உடனே, சக மாணவர்கள் நல்ல உடை அணிந்திருப்பார்கள், ஆங்கிலத்தில் நல்லா பேசுவார்கள். அது சரியான ஆங்கிலமா என்று தெரியும் அளவிற்கு கூட இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவர்களை பார்த்து பயப்படுவார்கள். கல்லூரியில் எல்லா ரக மாணவர்களும் வரும்போது இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரும். சிட்டியில் படித்த எனக்கு அது வந்தது. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் பிறகு அவர்களைவிடவும் நன்றாக ஆங்கிலத்தில் பேசவும் நல்ல உடை அணியவும் ஆரம்பித்து விடுவார்கள். அதனால் இலக்கு இதுதான் என முடுவு எடுத்து அதைச் சரியாக செய்யுங்கள். அதன் பிறகு எதுவும் உங்களைத் தடுக்க முடியாது. எங்க அப்பா 25 வயதிற்குள் உன் இலக்கை முடிவு செய்துவிடு என்று என்னிடமும் கூறினார். எனக்கு இன்ஜினியரிங் பிடிக்கவில்லை என அப்போது சொல்ல வெட்கமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு சினிமா பிடித்திருக்கிறது எனக்கூறி அதைக் கற்றுக்கொண்டேன். ஆனால் என்னுடைய இலக்கை நான் முடிவு செய்தபிறகுதான் எனக்கு அதெல்லாம் நடந்தது. எனவே இலக்கை சீக்கிரமாக முடிவெடுங்கள். தொடர்ந்து படியுங்கள், கல்வி பெரிய ஆயுதமாக உள்ளது. அகரம் அறக்கட்டளையில் உள்ள தம்பி தங்கைகள் எலோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.