இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக 'அசுரன்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். 'விஸ்வாசம்' படத்துக்குக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை டி.இமான் தட்டிச் சென்றார். சிறந்த துணை நடிகர் விருதை விஜய்சேதுபதி தட்டிச் சென்றார். மேலும், பல்வேறு பிரபலங்கள் பல துறைகளில் தேசிய விருதை தட்டிச் சென்றனர். இதனையடுத்து, இவர்களுக்குத் திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....
"மிக தகுதியுடைய தேசிய அளவிலான பாராட்டுகளைப் பெற்ற தனுஷ், வெற்றிமாறன், தாணு சார் மற்றும் அசுரன் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பார்த்திபன் சார் உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சி! 'ஒத்த செருப்பு' ஒரு மிகப்பெரிய முயற்சி. ரசூல் சார் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!
விஜய் சேதுபதி - ஒரு சவாலான கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வதும், அதன் மூலம் சொல்லாத வலியை வெளியே கொண்டு வருவதும் எளிதான காரியமல்ல. தேசிய விருதுக்கு வாழ்த்துக்கள்!
சகோதரர் இமான் - ஒவ்வொரு படத்தின் உணர்ச்சிகளையும் உயர்த்துவதில் நீங்கள் தொடர்ந்து காட்டும் அக்கறை இந்த தேசிய விருதாக வெளிப்பட்டுள்ளது.
நாக விஷால் - இந்த விருது உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய முதல் படியாக இருக்கட்டும்.
வம்சி சார் - 'மகரிஷி' திரைப்படத்திற்கான இந்தப் பாராட்டைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் படங்களின் சின்னச் சின்ன விஷயத்துக்கும் நீங்கள் மெனக்கெடுவதை நான் பல முறை கண்டிருக்கிறேன். மகரிஷி படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்.
ஜெர்சி - மனதுக்கு நிறைவான படத்துக்குக் கிடைத்த தகுதியான பாராட்டுகள். படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்" என வாழ்த்தியுள்ளார்.